வாஸ்து...

வாழ்க்கை வளமாக அமைய வாஸ்து சாஸ்திரம், நமக்கு வழிகாட்டுகிறது,
வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு
முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, நிருதி ஆகிய மூலைகளில்
இருக்கவேண்டிய, இருக்கக்கூடாத பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.
1. ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே
இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும்.
2. ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின்
படுக்கையறைகளை அமைக்கலாம்.
3. ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை,
தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது.
4. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல்
போன்றவைகள் இருக்கக்கூடாது.
5. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது.
6. வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான
மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு
ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும்.

7. அக்னி மூலை- தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம்
இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது
ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும்.
8. வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம்
அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில்
அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி
பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு)
மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம்.
9. அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை,
குளியலறை, இருக்கக்கூடாது.
10. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை,
குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும்
கல் போன்றவைகள் இருக்கக்கூடாது.
11. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.
12. செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர
(வடக்கு)மூலை, நிருதி (தென்மேற்கு)மூலையில் பணப்பெட்டி,
நிலைப்பேழை வைக்கவும்,
13. சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில்
பதிக்கவும்.
14.வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும்,
எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க
முடியாதவைகளே, தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில்
அமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை
சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு
தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான,
அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.
15. கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு)
மூலையில் அமைக்கவும், நிருதியில்(தென்மேற்கில்)
படுக்கையறையை ஒட்டி கழிப்பறை அமைக்கலாம்,
கழிவுத்தொட்டி கண்டிப்பாக வடமேற்கில் தான் இருக்க
வேண்டும்.
16. சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்)
மூலையில் கழிப்பறை அமைக்கலாம்.
17. பொதுவாக வீட்டில் எந்த இடங்களில் எடைமிக்க
பொருட்களை வைக்கலாம் என்பதை கீழ்காணும்
படத்தைப்பார்த்து அறிந்து கொள்க.

 

 

 

வாஸ்து ஒரு அறிமுகம்:

வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்

வாஸ்து புருஷ மண்டலம்

 

கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.

முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு இந்திரனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, நிருதி(ராட்சசன்) ஆகியோர் அதிபதிகள்.

Designed & Hosted by : Anusi Soft | copyright